காஞ்சிபுரத்தில் அரசுப் பள்ளியில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த நபர்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட சிறுபினாயூர் என்ற கிராமம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள திருவந்தார் என்ற இடத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த பொழுது குடிநீர் தொட்டியில் இருந்த நீரை மாணவர்கள் அருந்தியுள்ளனர். சமைப்பதற்காகவும் அந்த தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த நீரில் இந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து தொட்டியை பார்த்தபோது அதில் மனிதக் கழிவு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளி நிர்வாகம் புகார் அளித்த நிலையில், டிஎஸ்பி ஜுலியர் சீசர் மற்றும் ஆய்வாளர் பிரபாகரன் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். தொட்டியில் உள்ள நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது மனிதத்தன்மையற்ற செயல். குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் திருவந்தவார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள், குறிப்பாக இளம் மாணவர்கள் அருந்தும் குடிநீரில் மலத்தைக் கலப்பது என்பது மனிதர்களாக பிறந்தவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத கொடுமை ஆகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
வேங்கை வயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு இதுவும் கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேங்கை வயல் நிகழ்வில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது தான் இத்தகைய குற்றச்செயல்கள் தொடரவும், அதிகரிக்கவும் காரணமாயிருக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் வேங்கை வயலில் மனிதநேயமற்ற குற்றத்தை நடத்தியவர்களை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.