![cruel young man incident a woman who refused to accept his love](http://image.nakkheeran.in/cdn/farfuture/i_ZBhX1ovVEzaQDnzLG7U_79WD4St4NW9GKQ1ngzmjo/1733812448/sites/default/files/inline-images/22_131.jpg)
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமியைக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ராகவேந்திரா(21) என்ற இளைஞர் காதலிப்பதாகக் கூறி பின் தொடர்ந்துள்ளார். சிறுமி செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து செல்லும் ராகவேந்திரா, தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், சிறுமி ராகவேந்திராவின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் ராகவேந்திரா சிறுமியை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமி ராகவேந்திராவின் காதலை ஏற்க மறுத்து எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமி நந்தியாலா மாவட்டத்தில் உள்ள தனது தாத்தா - பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார். அனால் அங்கேயும் சிறுமியை ராகவேந்திரா பின் தொடர்ந்து சென்றுள்ளார். கடந்த திங்கட்கிழமை அதிகாலை சிறுமி பாட்டி வீட்டில் அசந்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த ராகவேந்திரா சிறுமியின் அறையின் கதவைத் தட்டியுள்ளார். சிறுமி கதவை திறந்தவுடனே, உள்ளே சென்ற ராகவேந்திரா, சிறுமியின் வாயைத் துணிகளால் கட்டி கதவை உள்பக்கமாக பூட்டியுள்ளார். பின்னர் சிறுமியின் மீது பெட்ரோலை ஊற்றி கொடூரமாக எரித்துள்ளார். இதனால் சிறுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து 70 சதவீத தீக்காயங்களுடன் தப்ப முயன்ற ராகவேந்திராவை பிடித்த அப்பகுதியினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் தீக்காயங்கள் காரணமாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். காதலை ஏற்க மறுத்த சிறுமியை எரிந்து கொன்ற இளைஞரின் செயல் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.