Skip to main content

பணியில் இல்லாதவர்களுக்கு சம்பளம்; கோடிக்கணக்கில் மோசடி - அம்பலமான தில்லாலங்கடி!

Published on 04/10/2024 | Edited on 04/10/2024
Crores fraud in City Co-operative Credit Union

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் பகுதியில் நகரக் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரையடுத்து கூட்டுறவு தணிக்கை துறையினர் கடந்த ஆண்டு தணிக்கை மேற்கொண்டுள்ளனர். அப்போது பல்வேறு முறைகேடுகள் வெளியே வந்துள்ளது. இதில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றவர்களை பணியில் இருப்பதாகக் கணக்கு காட்டி மாத மாதம் சம்பளத்தை எடுத்துள்ளனர். 

மேலும் கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் பெற்றது, வைப்புநிதியைக் கையாடல் செய்தது என மொத்தம் 7 கோடியே 81 லட்சத்து 452 ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. மேலும் இம்மோசடியில் தென்கடப்பந்தாங்கல் நகரக் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் சங்கர், எழுத்தர் பாரதி ஈடுபட்டது கண்டறியப்பட்டு இருவரையும் பணி நீக்கம் செய்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக நகரக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் சுவேதா, வேலூரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் 7 கோடி மோசடியில் ஈடுபட்ட செயலாளர் சங்கர் எழுத்தாளர் பாரதி ஆகிய இருவரைக் கைது செய்து வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.  இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சார்ந்த செய்திகள்