விவாசாயிகளுக்கான பயிர் காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சில் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜீவகுமார் என்பவர் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்வதற்கான திட்டத்துக்கான டெண்டரை இறுதி செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தமிழகத்தில் முன்பு முப்போகம் விளைந்தது. ஆனால் தற்போது ஒருபோகம் விளைவிப்பதே கேள்விக்குறியாகி உள்ளது. விவசாயிகள் விசயத்தில் அரசுகள் கடுமை காட்டக் கூடாது. தமிழகத்தில் ராபி பருவம், காரீப் பருவம் எந்த மாதம் தொடங்குகிறது என்கிற அட்டவணையை தாக்கல் செய்ய மத்திய வேளான் துறை செயலாளருக்கு உத்தரவிடுகிறோம். விவாசாயிகளுக்கான பயிர்காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும்” என வேதனை தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கை நவம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.