உயிரிழந்த கட்சி நிர்வாகியின் படத்திறப்பு நிகழ்வு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''இன்றைக்கு பெரியாரை மிகக் கொச்சையாக விமர்சனம் செய்யக்கூடியவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் முளைத்து விட்டார்கள். அவர்களை பின்னிருந்து இயக்கக் கூடியவர்கள் யார் என்பதும் இன்றைக்கு அவர் மூலமே அம்பலமாகி இருக்கிறது. பெரியார் இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து அவரை வீழ்த்த வேண்டும் என நினைத்தவர்கள் யார் என்பதை நாடே அறியும். நாமும் அறிவோம். அந்த கும்பல் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போய் வீழ்ந்தார்களே தவிரப் பெரியாரை வீழ்த்த முடியவில்லை.
பெரியார் திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மட்டுமே உரித்தான ஒரு வழிகாட்டி அல்ல, விடுதலை சிறுத்தைகளுக்கும் அவர்தான் வழிகாட்டி, கொள்கை ஆசான். ஆகவே நாம், பெரியாரை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும் என வேடிக்கை பார்க்க முடியாது. பெரியாரை சொல்பவர்கள் அம்பேத்கரை சொல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். பெரியார் இந்த மண்ணில் தனது இறுதி மூச்சுவரை, 94 வயது வரை தமிழர்கள் தலைநிமிர வேண்டும் என்பதற்காக உழைத்த ஒரு மாமனிதர். தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர். அவரையே தமிழர் இல்லை தமிழ் தேசியத்தின் பகைவர் என்று சிலர் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதை நாம் அனுமதித்தால் அம்பேத்கரை மராட்டி என்று சொல்லி அந்நியப் படுத்துவார்கள். அவர் ஒரு மராட்டியர் அவருக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்; அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்; தமிழ்நாட்டில் தமிழை தாய் மொழியாக கொண்ட தலைவர்கள் தோன்றவில்லையா? இரட்டைமலை சீனிவாசன் இல்லையா? பண்டித அயோத்திதாசர் இல்லையா? எம் .சி.ராஜா இல்லையா? என்ற ஒரு பட்டியலை நீட்டுவார்கள். இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளுங்கள் அம்பேத்கர் வேண்டாம் என்று சொல்லக்கூடிய நாளும் வந்துவிடும். இது அரைவேக்காட்டுத்தனமான ஒரு அரசியல். மிகவும் அற்பத்தனமான ஒரு அரசியல். மொழிவாத இனவாத அரசியலை உயர்த்தி பிடிக்கும் முயற்சி இது'' என்றார்.