Skip to main content

''குற்றவாளிகள் தப்பிக்க முடியாது...'' - வழக்கறிஞர் ப.பா. மோகன் 

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

"Criminals can't escape!" - Advocate P.B. Mohan

 

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மூன்று ஆயுள் தண்டனை பெற்ற யுவராஜ், தனக்கும் தன் தரப்புக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார். அவர் தரப்பு வழக்கறிஞர்கள், சம்பவத்தன்று திருச்செங்கோடு மலைக்கோயிலில் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை என்று வாதிட்டனர். 

 

இதற்கிடையே, வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட சுவாதி, சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருப்பது தன்னுடைய உருவமே அல்ல என்று திடீரென்று பிறழ் சாட்சியம் அளித்தார். இதையடுத்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கேமரா பொருத்தப்பட்ட இடங்கள், நுழைவு வாயில் பகுதிகள் நேரில் ஆய்வு செய்யப்படும் என நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அறிவித்தனர்.

 

அதன்படி, ஜன. 22ம் தேதி அவர்கள் திருச்செங்கோடு மலைக்கோயிலில் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு தொடர்பாக கோகுல்ராஜின் தாயார் தரப்பு வழக்கறிஞரான பவானி பா.மோகனிடம் கேட்டபோது, “கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி, பிறழ் சாட்சியாக மாறிவிட்டார். இதனால் நீதிபதிகள் தாமாக முன்வந்து, சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து சம்பவ இடங்களை நேரில் ஆய்வு செய்துள்ளனர். வழக்கு சரியான கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது. எனவே, சுவாதி பிறழ் சாட்சியாக மாறினாலும், குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது” என்றார்.

 

அதேபோல் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், “நீதிபதிகள் சிறப்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்றனர்.

 

முன்னதாக, நீதிபதிகள் வருகையையொட்டி, சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மேற்பார்வையில், நாமக்கல் மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நீதிபதிகள் ஆய்வு ஒருபுறம் இருந்தாலும், பக்தர்கள் வழக்கம்போல் கோயிலுக்குள் எந்தவித கெடுபிடியுமின்றி வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்