திண்டுக்கல் மாவட்டத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது என முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கூறினார். திண்டுக்கல்லில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கூறியபோது, “திண்டுக்கல் மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எத்தனை குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
எத்தனை வழக்குகள் நீதிமன்றத்திற்குச் செல்கிறது என போலீசார் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருகிறது. பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியவில்லை. குறிப்பாக 57 சதவீத பெண்கள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
தினமும் 4 பெண்கள் வீதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், திருமண வயதை உயர்த்தும் நடவடிக்கை பயனளிக்காது. தாண்டிக்குடி அருகே உள்ள பாச்சலூரில் உயிரிழந்த பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு அரசு வழங்க வேண்டும். அதோடு குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று கூறினார்.