சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது அன்பு நகர்ப் பகுதி. இந்த சுற்றுவட்டாரத்தில் வசித்து வரும் மூதாட்டி ஒருவர், அவரது வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாகச் சென்ற 3 சிறுவர்கள் அந்த வயதான மூதாட்டி அவரது வீட்டில் தனியாக இருப்பதையும் அவர் கையில் ஒரு பர்ஸ் இருப்பதையும் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துள்ளனர்.
அந்த சமயத்தில் திடீரென வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சிறுவர்கள் மூதாட்டி கையில் வைத்திருந்த பர்சை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது தூக்கத்திலிருந்த மூதாட்டி, அந்தச் சிறுவர்களைப் பார்த்து அலறத் தொடங்கினார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தப்பியோடிய சிறுவர்களை விரட்டி பிடித்ததோடு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த குற்றப்பிரிவு காவலர் ராஜா, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்களை ஊர்மக்கள் முன்னிலையில் அடித்து உதைத்துள்ளார். அந்த சமயத்தில், அவ்வழியாக டூவீலரில் சென்ற இளைஞர் ஒருவர், சிறுவர்களை நடுரோட்டில் வைத்து அடிப்பதை படம் பிடித்துள்ளார். இதைப் பார்த்த காவலர் ராஜா “எதுக்கு வீடியோ எடுக்குறீங்க, நீங்க யாரு” என ஒருமையில் பேசியுள்ளார்.
இதையடுத்து, தான் ஒரு செய்தியாளர் என சொன்ன பிறகும் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஊர்மக்கள், செய்தியாளரையும் காவலர் ராஜாவையும் சமாதானப்படுத்தினர். பின்னர், திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், அந்த சிறுவர்கள் குற்றம் செய்தார்களா? என விசாரிக்காத காவலர் ராஜா, அவர்களை காவல் நிலையத்துக்கும் அழைத்துச் செல்லாமல் நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்துள்ளார். இதை வீடியோ எடுத்த செய்தியாளரையும் ஒருமையில் பேசி மிரட்டியுள்ளார். அதனால், காவலர் ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.