Skip to main content

ரயில்களில் பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா? - போலீசார் எச்சரிக்கை

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

crackers are carried in trains?- Police warning

 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ரயில்களில் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில், ஈரோடு மார்க்கமாகச் செல்லும் ரயில்களில் பட்டாசுகள் விற்பனைக்காகவோ அல்லது சொந்த பயன்பாட்டிற்காக பார்சல் மூலம் அனுப்பி வைக்கின்றனரா? என ஈரோடு ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரும், ஈரோடு ரெயில்வே போலீசாரும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ரயில்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் கூறியதாவது, 'தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பட்டாசுகளை விற்பனைக்காக கொண்டு செல்கின்றனரா என ஓடும் ரயில்களில் சோதனை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்களில் சோதனை அதிகரித்துள்ளோம். இன்னும் ஓரிரு நாளில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில் பகுதியில் பட்டாசுகள் கொண்டு செல்கின்றனரா எனப் பயணிகளின் உடைமைகளைச் சோதனை செய்த பின் ரயில்வே ஸ்டேஷனுக்குள் அனுமதிப்போம்.

 

மேலும், ரயிலில் பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். பயணிகள் பட்டாசுகளை ரயில்களில் எடுத்துச் சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ரயில்வே தண்டவாளத்தில் கவனக்குறைவாக கடக்கும் போது ரயில் மோதி இறக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதால், தண்டவாளத்தை கவனக் குறைவாக கடக்கக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், திருட்டு சம்பவங்களைத் தடுக்க தீவிர ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்