சிதம்பரத்தில் சட்டத்தை மீறும் தீட்சிதர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜா கோவில் தீட்சிதர்களின் குடும்பங்களில் தொடர்ந்து குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற திருமணங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இருந்தாலும் தொடர்ந்து குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகிறது. தீட்சிதர்களின் குழந்தைகளுக்குத் திருமணங்கள் நடைபெறவில்லையெனத் தமிழக ஆளுநர் குழந்தைத் திருமணத்தை ஆதரித்துக் கருத்து தெரிவித்து இந்திய அரசியல் சாசனத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளார். இது கண்டனத்திற்குரியது.
எனவே தமிழக அரசு தீட்சிதர்களின் குடும்பங்களில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதைக் கண்காணிக்கக் குழு அமைத்திட வேண்டும். நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஏற்று நடத்த சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திச் சிதம்பரம் காந்தி சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு குழந்தைத் திருமணத்தை ஆதரித்துப் பேசிய ஆளுநரைக் கண்டித்தும், குழந்தைத் திருமணம் நடைபெறாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை மீறும் தீட்சிதர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பினார்கள். நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.