Skip to main content

கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்! ராமதாஸ்

Published on 02/02/2019 | Edited on 02/02/2019
railway


தமிழகத் தொடர்வண்டித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2019&20 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தொடர்வண்டித்துறைக்கும், அத்துறையின் மூலதன செலவுகளுக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், தமிழகத் திட்டங்களுக்கு மிகக்குறைந்த அள்வே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்வண்டித் திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
 

மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தொடர்வண்டித்துறைக்கு ரூ.64,587 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துறையின் மூலதன செலவுகளுக்கான இலக்கு ரூ. 1,58,658 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு மற்றும் கேரளத்தின் ஒரு பகுதியைக் கொண்ட   தெற்குத் தொடர்வண்டித்துறைக்கு ரூ.2898.33 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் நிதி ஒதுக்கீடான ரூ.2932.61 கோடியை விட ரூ.34.28 கோடி குறைவு ஆகும். தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ள போதிலும், தமிழ்நாட்டுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம்? என்பது தான் தெரியவில்லை.
 

சென்னையிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களையும், புதுச்சேரி மற்றும் காவிரிப் பாசன மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் கிழக்குக் கடற்கரையோர தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் முதல்கட்டமாக சென்னையிலிருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக  கடலூர் வரை தொடர்வண்டிப் பாதை அமைக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால், 10 ஆண்டுகளாக இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இடைக்கால நிதிநிலை அறிக்கையிலும் இந்தத் திட்டத்திற்கு அடையாளமாக ரூ.10 லட்சம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி எதற்கும் பயன்படாது. கடலூர் வரை இந்தப் பாதையை அமைத்து, அதை ஏற்கனவே உள்ள பாதைகளுடன் இணைத்தும், புதிய பாதைகளை அமைத்தும் கன்னியாகுமரி வரை நீடித்தால், அது கிழக்குக் கடற்கரை சுற்றுலா மற்றும் ஆன்மிகச் சுற்றுலாவையும் ஊக்குவிக்கும். இதைத் கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகளை தொடர்வண்டித்துறை தொடங்க வேண்டும்.
 

அதேபோல், தருமபுரிக்கும், மொரப்பூருக்கும் இடையே ஏற்கனவே அகற்றப்பட்ட பாதையை மீண்டும் அமைக்கும் திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும்;  இத்திட்டப்பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்வண்டித்துறை அமைச்சர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான அன்புமணி இராமதாஸ் 18 முறை சந்தித்து கோரிக்கை விடுத்தார். ஆனாலும், அந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களும், மாநிலத் தலைநகரான சென்னையுடன் தொடர்வண்டிப்பாதை மூலமாக இணைக்கப்பட்டுள்ள நிலையில், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டத் தலைநகரங்கள் மட்டும் தான் சென்னையுடன் இணைக்கப்படவில்லை. 
 

தருமபுரி - மொரப்பூர் பாதை அமைக்கப்பட்டால் தருமபுரி மக்கள் சென்னைக்கு தொடர்வண்டி மூலம் வந்து செல்ல முடியும். இது தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். வட மாவட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திண்டிவனம் -நகரி, திண்டிவனம் - செஞ்சி- திருவண்ணாமலை ஆகிய  தொடர்வண்டித் திட்டங்களுக்கும் தலா ரூ.10 கோடி மட்டும் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூர்- விருத்தாசலம் - சேலம் அகலப்பாதை அமைக்கும் திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை.
 

மதுரை - போடி அகலப்பாதை, பட்டுக்கோட்டை& காரைக்குடி அகலப்பாதை, மதுரை- தூத்துக்குடி புதிய பாதை ஆகிய திட்டங்களுக்கு ரூ.30 கோடி முதல் ரூ.100 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும், அது திட்டங்களை விரைந்து முடிப்பதற்கு போதுமானதல்ல. தமிழகத்திற்கான தொடர்வண்டித் திட்டங்களுக்கு, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித்துறை அமைச்சர்களாக இருந்த போது தான் அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பின் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப் படாததால் தொடர்வண்டித்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் அத்திட்டங்களுக்கான செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதேநிலை நீடித்தால் அந்தத் தொடர்வண்டித் திட்டங்கள் கைவிடப்படும் ஆபத்து உள்ளது. அவ்வாறு கைவிடப்பட்டால் அது பொதுவாக தமிழகத்தின் வளர்ச்சியையும், குறிப்பாக வடக்கு மாவட்டங்களில் வளர்ச்சியையும் கடுமையாக பாதிக்கும். இது நன்மை பயக்காது.
 

எனவே, தமிழ்நாட்டில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள தொடர்வண்டித் திட்டங்களுக்கு  கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். அத்திட்டப்பணிகளை இலக்கு வைத்து நிறைவேற்றி முடித்து,  தொடர்வண்டி சேவைகளைத் தொடங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்