Skip to main content

''சிறுபான்மையினர் மீது நாடு முழுவதும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்''- சிபிஎம் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

Published on 28/12/2021 | Edited on 28/12/2021

 

CPM Secretary of State Balakrishnan  press meet

 

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற சி.பி.எம் மாவட்ட மாநாட்டில் சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேரணியைப் பார்வையிட்டு உரையாற்றினார்.

 

அதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சி.பி.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், ''நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது கொலை வெறிதாக்குதலை நடத்தி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் தினத்தன்று உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சர்ச்சுகளை இடித்துத் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். சிலையை உடைப்பது பாதிரியார்கள் மீது தாக்குதல் என மிருகத்தனமான தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள். அதேபோல ஹரித்துவார் என்ற இடத்தில் இந்துக்கள் பாராளுமன்றம் என்ற பெயரில் மடாதிபதிகள் நடத்தியிருக்கிற அந்த மாநாட்டில் சிறுபான்மை மக்களைத் தாக்குவது என்பதை குறித்துப் பேசியிருக்கிறார்கள்.

 

மதவெறி தலைவிரித்தாடுகிற நிலைமை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த கவலையளிக்கிற ஒரு விசயம். காலம் காலமாக மக்கள் ஒற்றுமையுடன் வாழும் மதச்சார்பற்ற இந்திய நாட்டில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள் கொலைவெறியோடு பேசுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நான் கண்டிக்கிறேன். ஆனால் பிரதமர் நரேந்திரமோடி ஒரு வார்த்தை கூட கண்டனம்  தெரிவிக்கவில்லை. ஹரித்துவாரில் பேசிய பேச்சு குறித்து காவல்துறையினர் சாதாரணமாக ஜாமீனில் வெளிவருகிற வழக்குகளைப் போட்டுள்ளனர். இதற்கு பின்னால் மத்திய பாஜக அரசாங்கமே இருக்கிறது என்பது தான் எங்களுடைய பகிரங்கமான குற்றச்சாட்டு.

 

எப்படி தமிழ்நாட்டில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்திருக்கிறார்களோ,  அதேபோல இந்தியாவில் இருக்கிற காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எல்லா மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்று சேர்ந்து நாட்டுக்கு ஏற்பட்டிருக்கிற பேராபத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக பாஜக பலரையும் களத்தில் இறக்கி விட்டுள்ளது. மம்தா பானர்ஜியும் அதற்கு துணைபோவதுபோல் தான் தெரிகிறது. இது ஆபத்தானது. இதை தடுத்து நிறுத்துவதற்கு எப்படி இந்தியாவிற்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறதோ அதேபோல பாஜக ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை முறியடிக்க முன்வரவேண்டும்.

 

CPM Secretary of State Balakrishnan  press meet

 

தமிழக முதல்வர் பொங்கல் பரிசுத்திட்டத்தை அறிவித்துள்ளார். மழை, வெள்ளம் வந்திருக்கிற சூழ்நிலையில் அவர்களுக்கு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. நிதி நெருக்கடி கடுமையாக உள்ளது என்பது உண்மை தான். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் கொடுக்க மறுத்துள்ளது. பிரதமர் மோடி வருகிற 12ம் தேதி வருவதாக அறிவித்துள்ளார். எனவே பிரதமரிடம் பேசி மழை வெள்ள நிவாரணத்தைப் பெற்று இந்த பொங்கல் விழாவையொட்டி குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க முன்வரவேண்டும்.

 

சமீபத்தில் அதிமுக ஊழல்கள் குறித்து திமுக நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் 20 கோடி பெறுமானமுள்ள அரசு நிலங்களைத் தனியாருக்குப்  பட்டா போட்டு கொடுத்தது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படி தனியாருக்கு அதிகாரிகள் மட்டுமே பட்டா போட்டுக்கொடுத்திருக்க வாய்ப்பில்லை. அந்த அதிகாரிகளுக்குப் பின்னால் இருந்து கட்டாயப்படுத்தியது யாரு? அரசியல் செல்வாக்குள்ள உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் யாரும் சொல்லாமல் இந்த 109 ஏக்கர் நிலத்தைப் பட்டா போட்டுக் கொடுக்க முடியும். அதிமுக ஆட்சியின்போது இப்படி பல்வேறு மாவட்டங்களில் அரசு நிலத்தைப் பட்டா போட்டுக் கொடுத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று கூறினார்.

 

இந்த  பேட்டியின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர், பாண்டி, மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், மாவட்டுச்செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்