சேலம் – சென்னை வரையிலான எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டுமென இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகஸ்ட் 1ந்தேதியான நேற்று திருவண்ணாமலையில் இருந்து சேலத்துக்கு, என் நிலம் – என் உரிமை என்கிற பெயரில் நடைபயணம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றியபோது, இந்த நடைப்பயண தொடக்கவிழாவுக்கு தடை விதித்துள்ளார்கள். நீங்கள் தடுத்தால் தடையை மீறுவோம். கைது செய்யுங்கள், நாங்கள் கவலைப்படமாட்டோம். நீங்கள் அனுமதித்தால் சேலம் போவோம், கைது செய்தால் வேலூர் போவோம். எதற்கும் தயங்கமாட்டோம் என்றார்.
இதைத்தொடர்ந்து, தொடக்கவிழா முடிந்ததும் பாலகிருஷ்ணன் தலைமையில் அனைவரும் நடைப்பயணத்தை துவங்கினர். நடைப்பயணம் தொடங்கிய இடத்தில் இருந்து 50 அடி தூரத்திலுலேயே எஸ்.பி சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீஸார் கைது செய்ய தடுப்பு வைத்து தடுத்தனர். தடுப்புக்களை தள்ளிவிட்டுவிட்டு விவசாயிகளும், சிபிஎம் கட்சியினரும் முன்னேறினார்கள். அவர்களை இழுத்துப்பிடித்து போலீசார் கைது செய்தனர். கைது செய்வதை கண்டித்து சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் 300க்கும் அதிகமானவர்கள் கைதாகினர். அவர்களை போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர். இதையடுத்து, மாலையில் விடுதலை செய்தபின்பு, நடைப்பயணத்தை மீண்டும் துவங்குவோம் என சிபிஎம் நிர்வாகிகள் கூறியதால், என்ன செய்வது என போலீசார் மேலிடத்திடம் விவாதித்து வந்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் நள்ளிரவு 12 மணி அளவிலும் விடுதலை செய்யாமல் திருமண மண்டபத்திலே சிறை வைக்கப்பட்டனர். இதையடுத்து காவல்துறையினருக்கும், சிபிஎம் நிர்வாகிகளுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எற்படவில்லை. இதனிடையே மேலிடத்தில் இருந்து அவர்களை விடுதலை செய்யக்கோரி உத்தரவிடப்பட்டது. இதன்பின் திருமண மண்டபத்தில் இருந்து வெளியே வந்தவர்கள், அறிவித்தப்படி இரவு 12 மணியளவில் மீண்டும் நடைபயணத்தை தொடங்கினர். இதனால் மீண்டும் அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
16 பெண்கள் உட்பட 89 பேர் இரண்டாவது முறை கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். விடுதலை செய்தால் மீண்டும் நடைபயணம் தொடர்வோம் என கூறுவதால் அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க திருவண்ணாமலை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகள் போலீஸ் தரப்பில் செய்யப்பட்டு வருகிறது.