நாட்டின் ஜனநாயக அமைப்பில் நான்காவது நிர்வாகம் தேர்தல் ஆணையம் இது மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற வேண்டியுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில குழு இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு விரிவாக கடிதம் எழுதியுள்ளது. இக்கடிதத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான முன்னாள் எம்.எல்.ஏ. நா. பெரியசாமி அனுப்பியுள்ளார்.
மேலும் விரிவான அக்கடிதத்தில் "இந்திய நாட்டின் தேர்தல் ஆணையம் என்பது நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடத்துவதற்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் படி அதிகாரம் பெற்றுள்ள மிக முக்கியமான அமைப்பாகும். அது நீதித்துறை அடுத்து சட்டமியற்றும் துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள்), நிர்வாத்துறையை அடுத்து ஏற்படுத்தப்பட்டுள்ள நான்காவது மிக முக்கியமான ஒரே நிர்வாக அமைப்பாகும். ஆகவே தான் அது நீதி துறையைப் போல் மக்கள் நம்பிக்கையின் ஊற்றாக இயங்க வேண்டியிருக்கிறது.
ஆனால் நடைபெற்று வருகிற 17-வது நாடாளுமன்ற தேர்தலில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கை கடுமையான நெருக்கடியில் சிக்கியிருப்பது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகள் மீறப்படும் அத்துமீறல்கள் அன்றாடம் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் தனது சார்பற்ற நடுநிலை மற்றும் நியாயமான நடவடிக்கைகளை நிலைநாட்ட விரைந்து செயல்பட வேண்டும் .
இதற்கான முறையில் அண்மையில் 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 20 வாக்காளர் வாக்களிப்பு சரிபார்க்கும் இயந்திரங்கள் (விவி பாட்) ஆகியவற்றை கோயமுத்தூர் மாவட்டத்தில் இருந்து ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களுக்கு எதற்காக எடுத்துச் செல்லப்பட்டது என்பதற்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 07.05.2019 அன்று, பின்னிரவு நேரத்தில் தேர்தல் களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் கவனத்திற்கு தெரிவிக்காமல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை அப்பட்டமாக மீறிய செயலாகும். இது ஆழ்ந்த சந்தேகத்தை உருவாக்கும் வலுவான காரணமாகியுள்ளது.
ஈ வி எம் மற்றும் விவிபாட் தொடர்பான விதித்தொகுப்பு, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட ஆவணம் எண் 2, நான்காம் பதிப்பு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்காமல் பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இடமாறுதல் செய்யக்கூடாது என தெளிவாக கூறுகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் கருவிகளை இடம் மாற்றியது தொடர்பாக நம்பிக்கை அளிக்கும் விளக்கம் ஏதும் தரவில்லை. இது சந்தேகம் மற்றும் யூக வாதங்களை அதிகப்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் அலுவலர் ஊடகங்களில் பேசிய போது சில வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தும் போது பயன்படுத்த, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இடமாற்றம் செய்யப்பட்டது என்று கூறினார். இது எந்தெந்த வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு? எங்கெங்கு மறுவாக்குப் பதிவுக்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன? யார்,யார் கொடுத்த புகார்கள் மற்றும் வேண்டுகோள் படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன.
சட்டவிதிகளுக்கு மாறாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டதற்கு எமது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறோம். எந்தக் கட்டாயச் சூழல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இடமாற்றம் செய்வதை நிர்பந்தித்தது என்பதற்கு தேர்தல் ஆணையம் ஏற்கத்தக்க வகையில் விளக்கம் அளிக்க வேண்டும்.அதே போல் தமிழ்நாடு தேர்தல் அலுவலர் கூறிய மறுவாக்குப்பதிவு குறித்த நடைமுறைகளையும் விளக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட சம்பவம் எழுப்பியுள்ள கேள்விகள் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கை கேள்விக்கு ஆளானால், அது ஜனநாயகத்தின் அடித்தளத்தை இழந்து விடும்.
இந்தியத் தேர்தல் ஆணையம் தனது மாண்புகளையும், மக்களின் நம்பிக்கைகளையும் காப்பாற்றும் என உறுதியாக நம்புகிறோம். இது தொடர்பான நடவடிக்கை விபரங்களை தெரிவிப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார். இதற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் என்ன பதில் தரப் போகிறது?