இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (19.11.2021) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ஆட்சிக்கு வந்ததுமுதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம் என தெரிவித்த அவர், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு, “2014ஆம் ஆண்டுமுதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். நாட்டின் விவசாயிகளில் 80 சதவீதம் பேர் சிறு விவசாயிகளாக உள்ளனர். விவசாயிகளின் வேதனைகளை அறிந்தவன் என்பதால்தான் அவர்களுக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திவருகிறேன்.
விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சரியான விதைகள், உரம், பயிர் காப்பீடு என சிறு விவசாயிகளுக்கான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. வேளாண் சட்டங்களை ஆதரித்த விவசாய சங்கங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. எனவே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். டெல்லி எல்லையில் கூடியுள்ள விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும். வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு மோடி தெரிவித்தார்.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன், நக்கீரன் இணையத்திடம் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் தெரிவித்திருப்பதாவது, “நவம்பர் 26ஆம் தேதியுடன் விவசாயிகளின் போராட்டம் ஓராண்டை நிறைவுசெய்கிறது. குளிரிலும், மழையிலும், வெயிலிலும் அவதியுற்று உலகத்தின் மிகப் பெரிய முற்றுகை போராட்டத்தை நடத்திய இந்திய விவசாயிகளுக்கு மாபெரும் வெற்றி. அவர்களுக்கு இந்திய நாடு காலகாலத்திற்கும் கடமைப்பட்டிருக்கும். ஒரு மலைப் பாம்பின் வாயில் சென்ற இந்திய விவசாயித்தின் உயிரை, இந்த விவசாயிகளின் போராட்டம் பாதுகாத்திருக்கிறது. அதேசமயம், இந்த வாபஸ் அறிவிப்புக்குள் வேறு ஏதும் சூட்சமம் உள்ளதா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.” இவ்வாறு சி. மகேந்திரன் தெரிவித்தார்.