
நியூட்ரினோ தொடர்பான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயம், நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்துக்கு அனுமதி மறுத்தது.
இந்தநிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், டாடா நிறுவனம் நியூட்ரினோ ஆய்வக பணிகளை தொடர அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு சுற்றுச்சூழல்துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரகுவேந்திர எஸ்.ரத்தோர், சத்தியவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தது, தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் ராகேஷ் சர்மா ஆஜரானார் " மத்திய அரசு மற்றும் டாடா நிறுவனம் ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3-ந்தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு, டாடா நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஆகியவை பதில் மனு தாக்கல் செய்தது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ரகுவேந்திர எஸ்.ரத்தோர், சத்தியவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்மனுதாரரின் பதில் மனுவுக்கு தங்கள் தரப்பு விளக்கமளிக்க கால அவகாசம் கோரினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பூவுலகின் நண்பர்கள் தரப்புக்கு கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.