தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பண விநியோகமும் நடந்துவருகிறது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதியில் போட்டியிடும் சி.பி.ஐ. வேட்பாளருக்கான தொகுதி பொறுப்பாளராக சி.மகேந்திரன் செயல்பட்டுவருகிறார். இந்நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த அறையை துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தோடு வந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இது குறித்து சி.மகேந்திரன் கூறும் போது, “நேற்று நள்ளிரவு, சரியாக 1.00 மணி. தேர்தல் பணிக்காக தேன்கனிக்கோட்டை ‘ சிட்டி’ வாடகை விடுதியில், ஒரு நபர் தங்கிக் கொள்ளும் அறையில் இருந்தேன். கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தேன். வாசலில் நவீன துப்பாக்கி ஏந்திய மூன்று ராணுவ வீரர்கள். ஐந்து பேர் கொண்ட வருமான வரி அதிரடி குழு.
“என்ன வேண்டும்‘ என்று கேட்டேன். “சோதனை” என்றார்கள். “செய்து கொள்ளுங்கள்” என்றேன். அறையில் சோதனை செய்து கொண்டே இருந்தார்கள். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
மாலைதான், கர்நாடக மாநிலத்தின் பாரதிய ஜனதா அமைச்சர்கள் மூலம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முயற்சிகள் தளி தொகுதியில் நடைபெறுகிறது என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொன்னேன். அன்று இரவே என் அறையில் சோதனை நடக்கிறது என்றால் இதைப் பார்த்து, எனக்குள் சிரித்துக் கொள்வதைத் தவிர நான் வேறு என்ன முடியும்?
வருமான வரித்துறை அதிகாரி பீகாரைச் சேர்ந்தவர். அவரும் அவரது குழுவினரும் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். என்னிடம் இருந்த பணத்தை அப்படியே அவர்களிடம் கொடுத்தேன் வாங்கவில்லை.
அவர்கள் சென்ற உடன் என்னிடமிருந்த பணத்தை எண்ணிக் கணக்குப் பார்த்தேன். மொத்தம் 377 ரூபாய் இருந்தது. பா.ஜ.க.வால் இந்த தொகுதியில் வெற்றி பெற முடியாது என்பதால் கலவரங்களை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் திமுக கூட்டணியை திசை திருப்ப ரெய்டுகளும் நடத்துகிறார்கள்” என்றார்.