காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை சுடுகாட்டுப் பகுதியில் கொட்டப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுவதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பரணிபுத்தூர் ஊராட்சி. இந்தப் பகுதியில் உள்ள சீனிவாசபுரம் சுடுகாட்டுப் பகுதியில் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதோடு அதிக குப்பைகள் சேர்ந்தால் அதற்கு தீ வைக்கப்படுவதால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
காலாவதியான மருத்துவக் கழிவுகள், குளிர்பான பாட்டில்கள், இறைச்சி கழிவுகள் என கொட்டப்படுவதால் அந்த பகுதியே சுகாதாரச் சீர்கேடு நிறைந்த பகுதியாகக் காட்சியளிக்கிறது. மேலும், கால்நடைகளும் அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்களை மேய்ந்து வருகின்றன. இது தொடர்பாக உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.