Skip to main content

அதிகரிக்கும் கொரோனா தொற்று; ஈரோட்டில் ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

covid related prevention action taken severe at erode district

 

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் மார்ச் மாதம் முதல் வேகமாக பரவ தொடங்கியது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த 3 வாரத்திற்கும் மேலாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே இரண்டு இலக்கில் பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு தற்போது மூன்று இலக்கில் பதிவாகி வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத் துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். முன்புபோல் முக கவசம் அணிய வேண்டும். கை கால்களை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலும் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் கடந்த ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகள்,அரசு மருத்துவமனை, நகர்ப்புற, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் நர்சுகள், மருத்துவர்கள், நோயாளிகள், நோயாளிகளை பார்க்கும் வரும் உறவினர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்ற புதிய உத்தரவு அமலுக்கு வந்தது.

 

மேலும், அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்றும் (10.04.2023) நாளையும் (11.04.2023) கொரோனா தடுப்பு அவசர கால ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், கொடுமுடி போன்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மருத்துவமனைகளில் போதிய அளவு படுக்க வசதி உள்ளதா ஆக்சிஜன் வசதி உள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

 

இதைப்போல் மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் கையிருப்பு  உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை தினமும் இரண்டு, மூன்று பேர் பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். ஒரு வாரத்திற்கு 400 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாளையும் ஈரோடு அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு அவசர கால ஒத்திகை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்