கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் நேற்று முன்தினம் (22.04.2021) வரை, கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை 2,10,136 பேர் போட்டுக்கொண்டுள்ளனர். இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 50 ஆயிரத்து 152 பேர் போட்டுள்ளனர். கோவாக்சின் தடுப்பூசி முதல் டோஸை எடுத்துக்கொண்டவர்கள் 35 ஆயிரத்து 301 பேர். அதேபோல் இத்தடுப்பூசியின் இரண்டாவது டோஸை 2,572 பேர் போட்டுள்ளனர்.
கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்களுக்கும் தடுப்பூசி மீது மெதுவாக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு நாள் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. ஆனால், அரசு மருத்துவமனைகளில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு 13 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே சேலம் மாவட்ட சுகாதாரத்துறைக்கு வந்துள்ளது. குறைந்த அளவே தடுப்பூசி மருந்துகள் வந்ததால், மற்ற மையங்களுக்கும் சொற்ப அளவில் மட்டுமே பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதனால் தடுப்பூசி மையங்களில் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்து டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் டோக்கன் பெறாதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதுகுறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கூறுகையில், ''நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் நாள்தோறும் சராசரியாக 500க்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகின்றனர். எல்லோருக்கும் தடுப்பூசி போடும் அளவுக்கு தற்போது மருந்துகள் இல்லாததால், முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு டோக்கன் வழங்குகிறோம். அதன் அடிப்படையில் ஒருநாளைக்கு அதிகபட்சமாக 200 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்கும் வரை டோக்கன் முறை பின்பற்றப்படும்'' என்றனர்.