கோவை கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நாகை மாவட்டம், சிக்கலைச் சேர்ந்த அசன் அலி மற்றும் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் தமிழகப் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. மற்றும் தமிழகப் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி தேசிய புலனாய்வு முகமையில் வழக்கு நிலுவையில் உள்ள அசன் அலி மற்றும் ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர். முக்கிய ஆவணங்கள் எதுவும் கிடைக்காததால் சுமார் ஒருமணி நேரம் நடந்த ஆய்வு மற்றும் விசாரணையை முடித்துவிட்டு காவல்துறையினர் புறப்பட்டனர்.
இந்நிலையில், அல் கொய்தா அமைப்பின் உதவியுடன் செயல்படும் ஒரு அமைப்பு தொடர்பாகத் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் 2019ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி தமிழகத்தில் சென்னை, நாகை உள்ளிட்ட 4 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் நாகை, சிக்கல் பகுதியைச் சேர்ந்த அசன் அலி, மஞ்சக்கொல்லை பகுதியைச் சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்த 9 மொபைல் போன்கள், 15 சிம் கார்டுகள், 7 மெமரி கார்டுகள், 3 லேப்டாப்கள், 6 ஹார்ட் டிஸ்க்குகள், 7 பென்டிரைவ்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்தியாவில் அன்சாருல்லா என்ற இயக்கத்தை உருவாக்கி சில குற்றங்களைச் செய்ய திட்டமிட்ட குற்றத்திற்காகத் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளால் 2019ம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி சிக்கலைச் சேர்ந்த அசன் அலி மற்றும் மஞ்சக்கொல்லை பகுதியைச் சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.