பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஏட்டாக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவை காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் கோமங்கலம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மணிமாறன். இவர் பணியில் இருந்தபோது ஒட்டன்சத்திரம் பகுதியில் நடந்த விபத்து ஒன்றில் தொடர்புடைய வாகனத்திற்கு உரிய காப்பீடு இல்லாமல் இருந்துள்ளது. இதனை மணிமாறன் முறைகேடாகப் புதுப்பித்ததுடன், விபத்தானது தான் பணியாற்றும் காவல்நிலைய எல்லைக்குள் நடைபெற்றதாக மோசடியாக வழக்குப்பதிவு செய்துள்ளார். இதுமட்டுமின்றி, மேலும் பல்வேறு நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் காணவில்லை என்ற சான்றிதழையும் சட்டத்திற்குப் புறம்பாக வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. காவல்நிலையங்களில் உள்ள ஆவணங்களில் காவல் ஆய்வாளரின் கையெழுத்தையும் மணிமாறனே போட்டதும் போலீசாரின் ஆய்வில் தெரியவந்துள்ளது. காவல்நிலையங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்களை போலியாக தயாரிப்பது, திருத்துவது உள்ளிட்ட பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டது போலீசாரின் தீவிர விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, கோவை சரக டிஐஜி விஜயகுமார் மணிமாறனை சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்து தலைமைக் காவலராக பதவியிறக்கம் செய்து அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். போலீசார் ஒருவரே பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டது போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.