மனித உயிர்களுக்கு நாளுக்கு நாள் உயிர் பயத்தை கொடுத்து வரும் கரோனா வைரஸ் தமிழகத்தில் ஊடுருவி 75 நாட்களை கடந்து விட்டது. சென்ற 70 நாட்களாக ஐந்து கட்டமாக பொது முடக்கம் நீடித்து வந்தது. தழிழகத்தில் சென்னை மண்டலம் தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஊரடங்கில் நீதிமன்றங்களும் மூடப்பட்டு அதன் பணிகளும் பெரும்பாலும் செயல்படவில்லை. முக்கிய வழக்குகள் மட்டும் இணைய வழி மூலம் நடத்தப்பட்டது. குறிப்பாக குற்ற வழக்குகள் விசாரணை இரண்டரை மாதமாக நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் தளர்வு அளிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான ஈரோடு மாவட்டத்தில் 9. ந் தேதி முதல் நீதிமன்ற பணிகள் செயல்பட தொடங்கியது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்திற்கு இன்று பணிக்கு வந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் வெப்ப அளவு பார்க்கப்பட்ட பின்னரே உள்ளே அனுப்பப்பட்டனர். அனைவரும் கையுறை, முககவசம் அணிந்து வந்தனர். சானிடைசர் மூலம் கைகழுவிய பிறகு ஒவ்வொருவருக்கும் கபசுர நீர் வழங்கப்பட்டது. 70 நாட்களுக்குப் பிறகு வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் அவர்களுக்குரிய உடையில் நீதிமன்றம் வந்தது அவர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.