தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த அவதூறு வழக்கில் அண்ணாமலை ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்.14 ஆம் தேதி தனது ரஃபேல் வாட்ச் ரசீதை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து திமுக அமைச்சர்கள் குறித்த வீடியோ ஒன்றைக் காட்சிப்படுத்தினார். அந்த வீடியோவில் திமுகவைச் சேர்ந்த முக்கியமானவர்களின் சொத்து மதிப்புகள் குறித்து காட்சிகள் இருந்தன. அண்ணாமலை தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் இந்த நோட்டீசை அனுப்பியிருந்தார். அண்ணாமலைக்கு விடுக்கப்பட்டுள்ள அந்த நோட்டீஸில், 'தனது பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இழப்பீட்டுத் தொகையாக 500 கோடி தர வேண்டும். நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்கத் தவறினால் குற்றவியல் வழக்கு தொடரப்படும். திமுகவினர் மீது அண்ணாமலை தவறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். திமுகவின் சொத்துக்களின் மதிப்பை உயர்த்தி தொடர்பில்லாத சொத்துக்கள் உள்ளிட்டவற்றின் மூலம் திமுகவிற்கு 1409.94 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகப் போலியான குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளீர்கள். சமூக வலைத்தளங்களில் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவை நீக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்காத நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்த்திடம் கடந்த 12.5.2023 அன்று அவதூறு வழக்கு தொடர்பாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரும் ஜூலை 14 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.