மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாய்களில் தேங்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
நாளிதழில் வந்த செய்தி அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து பதிவு செய்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி அமர்வின் முன்பு நடைபெற்றது.
அந்த விசாரணையில் "மதுரை செல்லூர் பந்தல்குடி மழைநீர் கால்வாயில் தேங்கியுள்ள குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி பந்தல்குடி மழைநீர் கால்வாயிலிருந்து செல்லும் கழிவுநீர் வைகை ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் , ஆழ்வார்புரத்திலுள்ள கழிவுநீர்குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்வதை தடுக்க உடைந்த குழாயை மாற்றி கழிவுநீர் வெளியேறுவதை சரி செய்ய வேண்டும் .
அதே போல் மதுரை ஆரப்பாளையம் பேருந்துநிலையம் பின்புறம் பொன்னகரம் மழைநீர் கால்வாயில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நீக்கி தூர்வாரததால் , மழைநீர் கால்வாய்களிலிருந்து தேங்கிய கழிவுநீர் சாலைகளில் செல்கின்றது . இதனால் அந்த பகுதிகளில் குடியிருப்போருக்கு பாதிப்பு ஏற்படுகின்றது . அதே போல் அந்த கால்வாயில் பாதுகாப்பற்ற முறையிலுள்ள மரப்பாலத்தால் கடந்த ஓராண்டில் 3 பேருக்கு மேல் கால்வாயில் விழுந்துள்ளனர். இது குறித்து கவுன்சிலர் முதல் மாநகராட்சி ஆதிகாரிகள் வரை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என நாளிதழ் செய்தியை சுட்டிகாட்டிய நீதிபதிகள் , சம்மந்தப்பட்ட செல்லூர் பந்தல்குடி கால்வாய் , ஆழ்வார்புரம் கழிவுநீர் குழாய் , பொன்னகரம் கால்வாய் என வைக் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது , கால்வாயில் தேங்கிய கழிவுநீர் அகற்ற கால்வாய் தூர்வாருவது , சாலையில் கழிவுநீர் செல்லாமல் குழாய் உடைப்பை சரி சாய்வது என , மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பணியை துவக்கி தூர்வாருவதுடன் , மரப்பாலத்தை அகற்றி பாதுகாப்பான பாலம் அமைத்து 7 நாட்களில் அறிக்கையை புகைப்பட ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்பிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபேனர்ஜி மற்றும் நீதிபதி ராஜமாணிக்கம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளை போடுபவர்கள் மீது அபராதம் விதிப்பதுடன் , கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அந்த உத்தரவில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது .