பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருந்து வருபவர் ஏ.பி. முருகானந்தம். இவர் மீது அவரது மாமனார் சுந்தரசாமி என்பவர் நீதிமன்றத்தில் 2016ஆம் ஆண்டு வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விபரங்களின்படி, கடந்த 2014ஆம் ஆண்டு ஞான செளந்தரி என்பவரை ஏ.பி. முருகானந்தம் திருமணம் செய்தார். அப்போது, 1.5 ஏக்கர் நிலம், 60 சவரன் நகை, ரூ. 10 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை வரதட்சணையாகப் பெற்றுள்ளார்.
சில மாதங்களில் அவரது மனைவி ஞான செளந்தரி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து சீர்வரிசை பொருட்களைத் திரும்ப ஒப்படைக்கோரி பெண்ணின் தந்தையும், ஏ.பி. முருகானந்தத்தின் மாமனாருமான சுந்தரசாமி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தான் இவர் இந்த வழக்கு விசாரணையின் போது, பல முறை ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தத்திற்கு, கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் 27ஆம் தேதி முருகானந்தத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு (27.11.2024) ஒத்திவைத்துள்ளார். பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தத்திற்கு கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.