சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (27.04.2018) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன்பு, பெரம்பூரைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை தெரிவிப்பதற்கு முன்னதாக, 11 பேர் மீதான தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்க கூடாது, 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் எப்போது தீர்ப்பு வழங்குவீர்கள்? என மனு தாக்கல் செய்தார்.
அதற்கு, "எப்போது, எந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்க வேண்டுமென்று நீதிமன்றத்திற்கு தெரியும்" என ஆவேசமடைந்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தேவராஜனை வெளியேற்றுமாறு மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டார். மேலும் தேவராஜன் தாக்கல் செய்த மனுவையும் ஏற்க மறுத்துவிட்டார். இதனால், உயர்நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
எந்தெந்த வழக்கில் எப்போது தீர்ப்பு என்பதை வழக்கை விசாரிக்கும் அமர்வுதான் முடிவு செய்யும். வழக்கின் விசாரணை மற்றும் தீர்ப்பு வழங்குவது உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. ஒரு வழக்கில் எப்போது தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்பது நீதிபதிகளுக்கு தெரியும்.
ஒரு வழக்கில் தீர்ப்பை இப்போது கொடுங்கள், நாளைக்கு கொடுங்கள் என்று யாரும் நீதிபதிகளை கோர முடியாது. 18 எம்எல்ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் மனுதாரர்கூட அல்லாத ஒருவர், நீதிமன்றத்திற்கு இடையூறு செய்வதுடன், நேரத்தை வீணடிப்பதை ஏற்க முடியாது என்று தலைமை நீதிபதி கூறினார்.