தமிழக காவல்துறையில் ஐ.ஜி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் முருகன் ஐ.பி.எஸ். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய போது, அந்த அலுவலகத்தில் தனக்குக் கீழ் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிசிஐ.டிக்கு மாற்றி உத்தரவிட்டது. இதனை பாலியல் தொல்லை, பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் முருகன் மீது வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் விசாரணைத் தொடங்கினர். இதனிடையே முருகனை காப்பாற்றுவதற்கு முயற்சிகள் நடப்பதாக பாதிக்கப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து அப்போது முருகன் அரசுப் பணியில் இருந்தால் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அனுமதி கோரப்பட்டது. அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்த நிலையில் நீதிமன்றத்தில் முருகன் மீது சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்குத் தொடர்பாக முருகன் நீதிமன்றத்தில் விசாரணை ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்குத் தொடர்பான விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று(22.11.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது முருகன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.