கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வடபலம்பட்டியைச் சேர்ந்தவர் விமல்குமார் (37). தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பூர்ணமி (30). இவரும் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த நான்கு ஆண்டுக்கு முன்பு பூர்ணமி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கொடமாண்டப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். பலமுறை விமல்குமார், தனது மாமியார் வீட்டுக்குச் சென்று மனைவியை தன்னுடன் வந்து வாழும்படி கேட்டுள்ளார். அவர் சமாதானம் ஆகவில்லை என்று தெரிகிறது.
இதற்கிடையே விமல்குமாருக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து, திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து, மனைவியை கடைசியாக ஒருமுறை அழைத்துப் பார்ப்போம் என்ற நம்பிக்கையுடன் மாமியார் வீட்டுக்கு விமல்குமார் பிப். 18ஆம் தேதி சென்றார். தன்னுடன் தனது தாயார் மகேஸ்வரியையும் சமாதானம் பேசுவதற்காக அழைத்துச் சென்றிருந்தார். விமல்குமார் தனது மனைவி பூர்ணமியை தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அப்போதும் அவர் பிடிகொடுத்துப் பேசவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் விமல்குமார் தனது மாமியார் அம்சவேணியிடம், உங்கள் மகளை குழந்தைகளுடன் என் வீட்டுக்கு வந்து வாழச்சொல்லுங்கள். இல்லாவிட்டால், விவாகரத்து கொடுக்கச் சொல்லுங்கள். நான் வேறு திருமணமாவது செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரம் அடைந்த பூர்ணமியும், அவருடைய தாயார் அம்சவேணியும் வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து விமல்குமாரை சரமாரியாகத் தாக்கினர். பலத்த காயம் அடைந்த அவர், தனது தாயாரை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார். வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்ற விமல்குமார் திடீரென்று மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவப் பரிசோதனையில் அவர், வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த விமல்குமாரின் தாயார், இதுகுறித்து போச்சம்பள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பூர்ணமி, அவருடைய தாயார் அம்சவேணி ஆகியோரைக் கைது செய்தனர். பெற்ற தாயின் கண் முன்னே மருமகளும், சம்பந்தியும் தனது மகனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் போச்சம்பள்ளி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.