கரோனா பரவல் அதிகரித்து வருவதால், நீதிமன்ற வழக்குகளை ஆன்லைன் வழியாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் பிறப்பித்திருக்கிறார்.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கரோனா பரவலின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இனி வரும் 2 வாரங்கள் மிகக் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்திருக்கும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், முகக் கவசம் அணிவதிலும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதிலும் மிகுந்த கவனம் தேவை என்று வலியுறுத்தி வருகின்றனர். பெரும்பாலும் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள் என்றெல்லாம் அறிவுறுத்தியுள்ள தமிழக அரசு, கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? வாரத்தில் 2 நாட்களாவது முழுமையான ஊரடங்களை அமல்படுத்தலாமா? என்று அதிகாரிகளுடன் இன்று (16.04.2021) ஆலோசனை நடத்துகிறார் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்.
இந்த நிலையில், பல்வேறு வழக்குகளுக்காக தமிழக நீதிமன்றங்களுக்கு தினமும் வந்து போகும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டும், நீதிமன்றங்களில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜியுடன், தமிழக சுகாதாரத்துறைச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயன் ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அந்த ஆலோசனையில், வழக்குகளை ஆன்லைன் மூலம் விசாரிக்க முடியுமா? என்கிற யோசனை அரசு தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ளது. இதனை தலைமை நீதிபதி ஒப்புக்கொண்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் தனபாலுடன் விவாதித்துள்ளார் சஞ்ஜிவ் பானர்ஜி. இதனையடுத்து, “முக்கிய வழக்குகள் மற்றும் ஜாமீன் வழக்குகளில் மட்டும் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜரானால் போதும். மற்ற வழக்குகளின் விசாரணை நாளை முதல் (17.4.2021) சென்னை உயர் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் ஆன்லைன் மூலம் விசாரிக்கப்படும்’’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் பதிவாளர் தனபால்.
இந்த நடைமுறை வருகிற 23ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும். அதன் பிறகான நடவடிக்கைகள் 22ஆம் தேதி நடக்கும் ஆலோசனைகளுக்குப் பிறகு தெரிய வரும் என்கின்றனர் சுகாதாரத் துறையினர்.