சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த பீட்டர்ராயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியான கச்சத்தீவு கடந்த 1974 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் தொடர்ந்து பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
உடன்படிக்கையை மீறும் வகையில் கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்திய மீனவர்கள் 378 பேர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர் என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலில் தெரியவந்து உள்ளது. எனவே, 1974 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்தியா - இலங்கை இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் வாதத்தை முன் வைக்கையில், ''இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்'' என தெரிவித்தார். இதனைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி அமர்வு, ''கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது'' என உத்தரவிட்டனர்.