பத்தாம் வகுப்பு மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள ரெட்டியூரைச் சேர்ந்த புலவேந்திரன் என்பவரது மகன் பிரகாஷ்(25). மாணவி ஒருவர் ஆயங்குடி பகுதியில் வசித்துக் கொண்டு ரெட்டியூர் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்தார். அவ்வாறு பள்ளிக்குச் சென்று வரும்போது பிரகாஷ் அந்த மாணவியைப் பின்தொடர்ந்து சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 09.12.2018 அன்று மாணவி தண்ணீர் எடுப்பதற்காக பாத்திரத்துடன் அருகில் உள்ள வாய்க்காலுக்குச் சென்றபோது மாணவியைப் பின் தொடர்ந்து சென்ற பிரகாஷ், மாணவியை வன்கொடுமை செய்துள்ளார். மாணவி கூச்சலிட்டதில் அருகிலிருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அதையடுத்து பிரகாஷ், அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் சேத்தியாதோப்பு போலீசார் வழக்குப் பதிவுசெய்து பிரகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கடலூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (08.02.2021) இறுதி கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 5,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகளைப் பாலியல் குற்றத்திலிருந்து பாதுகாக்கும் விதிகளின்படி அல்லது மாநில அரசின் ஏதேனும் ஒரு திட்டத்தின் மூலம் 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேற்கண்ட வழக்கு தொடர்பாக நீதிபதி உத்தரவிட்டார்.