கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், கே.ஜி.எஃப் தாலுகாவிலுள்ளது சம்பரசனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பா. இவரது மகன் முப்பது வயதான நவீன்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆந்திராவிலுள்ள பைனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த இருபது வயதான லிகிதா ஸ்ரீக்கும், பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்தநிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களது திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இந்தநிலையில், புதன்கிழமையான நேற்று(7.8.2024) காலை பெற்றோர்கள் முன்னிலையில் இரண்டு பேருக்கும் வெகு விமரிசையாகத் திருமணம் முடிந்தது. இதையடுத்து மதியம் புதுமணத்தம்பதிகளை முனியப்பபாவின் வீட்டில் இருந்த ஒரு அறையில் தனியாகத் தங்க வைத்தனர். அப்போது தம்பதிக்குள் திடீரென தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், புது மனைவியைக் கத்தியால் குத்திய கணவர், தன்னைத் தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உள்ளுக்குள் கேட்ட பயங்கர சத்தத்தால், கதவைத் தட்டி திறக்கும்படி உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கதவைத் திறக்கவில்லை. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு 2 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.
இதையடுத்து குடும்பத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருவரையும் சோதித்த மருத்துவர்கள் மணப்பெண் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார். மணமகன் நவீன் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆண்டர்சன்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாகத் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதில் அவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர். இதில் கத்திக்குத்து காயம் அடைந்த லிகிதா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நவீன்குமார் படுகாயம் அடைந்தது தெரியவந்தது. தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுமண தம்பதி இடையே ஏற்பட்ட தகராறுக்கான காரணம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
திருமணமான சில மணி நேரத்திலேயே புதுத் தாலியின் மஞ்சள் ஈரம் காய்வதற்குள் காதலித்த பெண்ணை கொலைசெய்த மணமகனால் கே.ஜி.எஃப் பகுதியில் அதிர்ச்சி நிலவுகிறது.