தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு காணொளி வாயிலாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. அதே சமயம் இறுதி மற்றும் 7 ஆம் கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து இன்று (30.05.2024) மாலை 5 மணியுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையும் முடிந்துள்ளது. மேலும் ஜூன் நான்காம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி வாயிலாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும் முதன்மைச் செயலாளருமான சத்யபிரதா சாகு இன்று (30.05.2024) ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள் அறிவிப்பு, பாதுகாப்பு மற்றும் பிற பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் விரிவான ஆய்வை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் சங்கர்லால் குமாவத், இணைத் தலைமைத் தேர்தல் அலுவலர் ஸ்ரீகாந்த், மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.