கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழனி நாடார் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் என்பவர் போட்டியிட்டார். இந்நிலையில் பழனி நாடார், செல்வமோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்வமோகன்தாஸ் பாண்டியன், வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் நடந்ததுள்ளது. எனவே பதிவான வாக்குகளை மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ண உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் தென்காசி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு மறு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் அலுவலராக தென்காசி உதவி ஆட்சியர் லாவண்யா நியமிக்கப்பட்டுள்ளார். காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்ற நிலையில் 20 நிமிடம் தாமதமாகக் காலை 10.20 மணிக்கு தொடங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிட்டார். இந்த மறு வாக்கு எண்ணிக்கையில் 2589 தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. மதியம் 12.30 மணியளவில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுவாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.