கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்த சம்பவத்தில் தொடர்புடைய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏசுதாஸ் (வயது 39) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 10 பேருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே சமயம் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித் குமார் (வயது 37) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.