திருச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபரை கைது செய்த போலீசார் 1,150 லிட்டர் சாராய ஊறலைப் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் அண்மையில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் சட்ட விரோதமாக விற்பதற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக காவல்துறை எடுத்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் திருச்சி மாவட்ட எஸ்.பியாக பதவியேற்ற பரண்குமார் பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக பிரத்யேக எண் ஒன்றை அறிவித்திருந்தார். அந்த எண்ணில் பதிவான ரகசிய புகார்களை வைத்து அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் திருச்சி புலிவலம் பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து அங்கு சென்று போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது உறுதிசெய்யப்பட்டது. இது தொடர்பாக லோகநாதன் என்பவரை போலீசார் கைது செய்ததோடு சுமார் 1,110 லிட்டர் கள்ளச்சாராய ஊறலைப் பறிமுதல் செய்தனர்.