விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பஞ்சவர்ணம் என்பவரின் பழக்கடையில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி சுப்புத்தாய் என்பவர் 500 ரூபாய் கொடுத்து பழங்கள் வாங்கியுள்ளார். அப்போது பஞ்சவர்ணத்திடம் பழங்களுக்காக தந்த 500 ரூபாய் நோட்டு மீது அவருக்கு சந்தேகம் எழ, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த 500 ரூபாய் நோட்டு போலி எனத் தெரியவர, சுப்புத்தாயிடமிருந்து ஆறு 500 ரூபாய் தாள்களைக் கைப்பற்றினர். வழக்குப் பதிவு செய்த போலீசார் சுப்புத்தாயிடம் விசாரணையைத் தொடர, தன்னுடைய மகள் துரைசெல்வியிடம் 500 ரூபாய் தாள்களை வாங்கியதாகக் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, துரைசெல்வியிடம் இருந்து 59 போலியான 500 ரூபாய் தாள்கள் கைப்பற்றப்பட்டன. தொடர் விசாரணையில், தனது தங்கையின் கணவர் பாலமுருகனை துரைசெல்வி கைகாட்டியிருக்கிறார். பாலமுருகனிடமிருந்து 50 போலியான 500 ரூபாய் தாள்கள் கைப்பற்றப்பட, அவர் சிவகாசியைச் சேர்ந்த அருணைக் கைகாட்டியிருக்கிறார். அருண் அளித்த தகவலைத் தொடர்ந்து, சிவகாசியைச் சேர்ந்த நவீன்குமாரிடம் இருந்து 557 போலியான 500 ரூபாய் தாள்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும், கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய மை, மடிக்கணினி, ஸ்கேனர், இரண்டு கலர் பிரிண்டர்கள், லேமினேஷன் மெஷின், ப்ரிண்டிங் பேப்பர் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சுப்புத்தாய், துரைசெல்வி மற்றும் பாலமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பிற குற்றவாளிகளை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தவேண்டிய நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.