கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, இன்று அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். அதற்குள் காரில் இருந்த ஒருவர் முற்றிலுமாக தீயில் எரிந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
முன்னதாக இந்த விபத்தில் இறந்தவர் குறித்து எந்த தகவலும் தெரியவராத நிலையில், தற்போது உயிரிழந்த நபர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் பழைய துணி விற்பனை தொழில் செய்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்பொழுது அவருடைய பின்னணி குறித்து தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். உக்கடம் ஜி.எம் நகர், கோட்டைபுதூர் பகுதியைச் சேர்ந்த இவரிடம் ஏற்கனவே தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை செய்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கோவை கார் வெடி விபத்து குறித்து பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கோவை நகரில் உக்கடத்தில் கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்ததாக செய்தி அனைவரும் கண்டிருப்பீர்கள். இதுதொடர்பாக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீஸ் உயர் அதிகாரிகள் கார் சிலிண்டர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து தங்களுடைய முதற்கட்ட விசாரணையை தொடங்கினார்கள். இது ஒரு விபத்து, குண்டுவெடிப்பு என்று இதுவரை சொல்லவில்லை. ஆனால் கோவை நகரில் அனைத்து இடங்களிலும் போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். காரில் ஏற்றிவரப்பட்ட சிலிண்டர் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பதை விசாரிப்பதற்கு ஆறு தனிப்படையின் அவசியம் என்ன?
திமுக ஆட்சியில் பதவியேற்ற நாள் முதல் மக்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவிவருகிறது. கடந்த ஒரு மாதத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை நமது மத்திய அரசு தடை செய்தபின், தமிழக பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கட்சி அலுவலகம், கடை, வீடுகளை குறி வைத்து 19 இடங்களில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன.
உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஒரு சூழலில் வாழ்ந்து வரும் நம்மைக் காக்க இந்த திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால்தான் தொடர்ச்சியாக சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் சிறையில் இல்லாமல் வீதியில் நடமாடி வருகிறார்கள்.
இன்றைக்கு நடந்த சம்பவம் மக்கள் நடமாடும் நேரத்தில் நடந்திருந்தால் எப்பேர்ப்பட்ட உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும். இறைவன் அருளால் மட்டுமே மக்கள் இன்று பிழைத்துக் கொண்டனர். கார் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவரின் பெயரை போலீசார் வெளியிட்டுள்ளனர். 2019-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமையால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட ஜமேசா முபீன் என்பவராகும்.
போலீஸ் வட்டாரங்களில் கார் வந்த சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தபின் வேகத்தடையினால் கார் கட்டுப்பாட்டை இழந்து குண்டுவெடிப்பு ஏற்படுத்துவதற்கு எடுத்துச் செல்லப்பட்ட சிலிண்டர் வெடித்ததாகவும், சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்கள் குண்டுவெடிப்பையே சுட்டிக்காட்டுவதாகவும் பேசப்படுகிறது. இது ஒரு திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என்பதை இந்த திமுக அரசு எப்போது ஒப்புக்கொள்ளும்.
கோவையில் தீவிரவாதிகளால் திட்டமிடப்பட்ட ஒரு குண்டு வெடிப்பு சம்பவம். இதை சொல்வதற்கு தமிழக முதல்வர் தயங்குவது ஏன்? தேசவிரோத தீவிரவாத கும்பல் இப்படிபட்ட சதி திட்டத்தை தீட்டி பண்டிகை நாளன்று ஆள் நடமாட்டம் உள்ள இடத்தில் குண்டு வெடிக்கவைத்து உயிரை கொல்லும் வரை உளவுத்துறை உறங்கிக்கொண்டிருந்ததா?
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை தயவுதாட்சனையின்றி கைது செய்யவேண்டும் என்பது தமிழக பா.ஜ.க.வின் கோரிக்கை ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.