தேசமே சுய ஊரடங்கை கடைப்பிடித்து வரும் நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள புதுப்பட்டி விலக்கில், வட மாநிலத்தவர்கள் நடத்தும் தங்க பாக்யா பஞ்சு மில் மட்டும் இயங்கிக் கொண்டிருந்தது.
‘வேலை எதுவும் பார்க்காதீங்க.. இன்னிக்கு வீட்ட விட்டு வெளிய வராதீங்கன்னு, பிரதமர் நரேந்திரமோடி இந்தியில்தானே பேசினார்? எல்லாரும் வெளிய தலைகாட்டாம, கம்முன்னு இருக்கிறப்ப, இந்த இந்திக்காரங்க மட்டும் வேலை வச்சா எப்படி?’ என்று அந்த ஏரியாவாசிகள் எரிச்சல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், திடீரென்று அந்தப் பஞ்சு மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.
அந்த மில்லில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தகவலறிந்து ஊடகத்தினரும் வந்துவிட்டனர். பஞ்சு மில் பொறுப்பாளரான வடமாநிலப் பெண் ஒருவர், இந்தி மொழியில் ‘காச்மூச்’ என்று சத்தம்போட்டு ஊடகத்தினரை விரட்டியிருக்கிறார். வன்னியம்பட்டி காவல்துறையினராலும் அந்தப் பெண்ணைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நடந்த தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அந்தப் பகுதி மக்கள் “குறைஞ்சது முப்பது பேராச்சும் அங்கே வேலை பார்ப்பாங்க. எல்லாரும் இந்திக்காரங்கதான். லீவுங்கிறதே இல்ல. 24 மணி நேரமும் வேலை நடக்கும்.” என்று கூறுகின்றனர்.
இந்திய தொழிற்சாலைகள் சட்டம், இந்திய தொழிலாளர் நலச் சட்டங்களெல்லாம் உள்ளனவே! அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய தொழிற்சாலைகள் ஆய்வாளர் கண்ணில் தங்க பாக்யா பஞ்சு மில் படவே இல்லையா?