Skip to main content

அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார்... அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு...!

Published on 07/01/2020 | Edited on 07/01/2020

மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக நடைபெற்ற ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

corporation-tender-case-minister-sp-velumani-high-court-order

 



சென்னை, கோவை மாநகாரட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, அவரின் நெருங்கியவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கியதால் அரசுக்கு  இழப்பு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. பொன்னி  மேற்கொள்ள வேண்டும் எனவும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், இந்த விசாரணையைக் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய  வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஆரம்பக்கட்ட விசாரணையில் அரசு சாட்சிகளிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்ய முடியாது எனவும், ஊழல் தடுப்பு சட்டத்தின்படி ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தத் தேவையில்லை எனவும், ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை இதனை மீறி விசாரணை நடத்துவதாகவும் வாதிட்டார். குற்ற விசாரணை நடைமுறைச் சட்டத்தின்படியே ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை தனக்கான ஒரு சுற்றறிக்கையை வைத்துக் கொண்டு, அதன்படி விசாரணை நடத்துவதாகக் கூறுவதை ஏற்க முடியாது எனவும் வாதிட்டார்.

 

corporation-tender-case-minister-sp-velumani-high-court-order

 

 

நாங்கள் அளித்த புகார் மீது வழக்கு பதிவு செய்து நடத்துவதற்கான போதுமான அனைத்து ஆவணங்களும் இருப்பதாகவும், ஆனால்,  லஞ்ச ஒழிப்புத்துறை அதனை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். பொது ஊழியருக்கு எதிரான வழக்கு  லஞ்ச ஒழிப்புத்துறையால் நடத்தப்படுவதற்கு ஆளுநரிடம் மட்டுமே அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தவரை தலைமைச் செயலாளரிடம் அனுமதி பெற்றிருப்பது, தேவையற்று வழக்கை இழுத்தடிப்பதற்கும், வழக்கை  நீர்த்துப் போகச் செய்வதற்குமான முயற்சியே ஆகும் எனத் தெரிவித்தார். எனவே இந்த வழக்கைப் பொறுத்தவரை சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும். அது, உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலை என வாதிட்டார்.

அறப்போர் இயக்கத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், தமிழகத்தின் மூத்த அமைச்சருக்கு எதிராக மாநில அரசுத் துறையால் நடத்தப்படும் விசாரணை என்பது நியாயமாக நடைபெறாது. எனவே இந்த விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறைச் சட்ட விதிகளின்படி, மூன்று மாதத்திற்குள் ஆரம்பக்கட்ட விசாரணையை முடித்து இருக்க வேண்டும்.  சில சிக்கலான மற்றும் அரிதான வழக்குகளில் மட்டுமே மேலும் கூடுதலாக ஒரு மாதம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக கடந்த ஆண்டு ஜனவரி 29-ம் தேதி ஆரம்பக்கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை தொடங்கியதாகவும், ஆனால், சுமார் ஒரு வருடம் ஆகியும் விசாரணையை இன்னும் முடிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

பொத்தாம் பொதுவாக புகார் அளிக்கவில்லை எனவும், ஒரு புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆவணங்கள் இணைத்து அளித்ததாகவும்,  ஆனால் இதுவரை வழக்கு பதிவு செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இருந்தும் வழக்கு பதிவு செய்யவில்லை. கோவை மாநகராட்சியில் குறிப்பிட்ட அந்த இரண்டு ஒப்பந்ததாரர்கள் மட்டுமே அனைத்து ஒப்பந்தங்களையும் எடுப்பதாகவும் சில மணி நேர இடைவெளியில் இவர்கள் ஒரே ஐபி இணையத்தள முகவரி மூலமாகவே அவர்கள் பதிவேற்றம் செய்ததாகவும் தெரிவித்தார். எனவே, இது முறைகேடு நடைபெற்றது  என்பதற்கான சந்தேகத்தை வலுப்படுத்துவதாக  இருப்பதாகவும் வாதிட்டவர். லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பக்கட்ட விசாரணை நடத்துவதை அனுமதிக்க முடியாது எனவும், அது லஞ்ச ஒழிப்புத் துறையின் புதிய சட்டத்திற்கு எதிராகவே அந்தத் துறை செயல்படுவது, இதன் மூலம் உறுதியாகிறது என வாதிட்டார்.

லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான தமிழக அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன் மனுதாரர்கள் புகார் மனு மீது ஆரம்பக்கட்ட விசாரணை முடிக்கப்பட்டு அது தொடர்பான அறிக்கையினை விசாரணை அதிகாரி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் அளித்திருப்பதாகவும் மேற்கொண்டு அவர் தான் அதன் மீது முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையை அடுத்த விசாரணையின் போது சீல் வைத்த கவரில் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 23 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

சார்ந்த செய்திகள்