இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய “கவனித்தல், கற்றல், தலைமைதாங்குதல் என்ற தலைப்பில், தனது இரண்டுகால பணிகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டார். சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இந்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.
இதில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், “வெங்கையா நாயுடுவை 25 ஆண்டுகளாக எனக்குத் தெரியும். ஐதராபாத் நகரில் நண்பர் ஒருவரின் மூலமாக முதல்முதலில் அவரை சந்தித்துப் பேசினேன். அதன்பிறகு பெங்களூருவில் ஒருமுறை 2 மணிநேரம் சந்தித்துப் பேசும் வாய்ப்புகிடைத்து. அப்போதுதான் எனக்கு ஒருவிஷயம் புரிந்தது. அவர் தப்பித்தவறி அரசியல்வாதி ஆகிவிட்டார். அவர் ஓர் ஆன்மீகவாதி” என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவை புகழ்ந்து பேசினார்.
அதோடு, காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டது குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், “காஷ்மீரை இரண்டாகப் பிரித்த நடவடிக்கை மிகவும் சிறப்பானது. இதை மேற்கொண்டதற்காக அமித்ஷாவிற்கு வாழ்த்துகள். அமித்ஷாவும், பிரதமர் மோடியும் அர்ஜுனனும், கிருஷ்ணனும் போன்றவர்கள். இதில் யார் அர்ஜுனன், யார் கிருஷ்ணன் என்பது நமக்குத் தெரியாது. அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்” என்று பேசினார். நடிகர் ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு, விவாதத்துக்குள்ளானது.
இந்நிலையில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவிற்காக முதலில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அழைப்பிதழ் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் சார்பில், அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில், கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரிரங்கன், துக்ளக் குருமூர்த்தி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், ரஜினிகாந்தின் பெயர் அதில் இடம்பெறவில்லை.
“ரஜினியின் முக்கியத்துவம் அறிந்தே, கடைசிநேரத்தில் அவரை புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருக்கிறார்கள். அவரது வருகைக்கு முன்னுரிமை கொடுப்பதில் மோடியும், அமித்ஷாவுமே தீவிரம் காட்டினார்கள்” என்கிறது பா.ஜ.க. தரப்பு.