தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ஏற்கனவே இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், இன்று (25/04/2021) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தளர்வற்ற முழு பொது முடக்கம் அமலுக்கு வந்தது.
பால், மருந்து, பத்திரிகை விற்பனைக் கடைகள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன, தளர்வற்ற முழு பொதுமுடக்கத்தையொட்டி தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர். சென்னையில் சுமார் 12,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்; அதேபோல் 288 இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வாகனங்கள் பறிமுதல்: காவல்துறை எச்சரிக்கை!
இன்று முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தேவையின்றி வெளியே சுற்றுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். முழு பொதுமுடக்கத்தின் போது தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தெருக்களில் தனிமனித இடைவெளியின்றிக் கூட்டமாகக் கூடி நிற்பதையும் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னையில் அம்மா உணவகங்கள் இன்று செயல்படும்!
சென்னையில் ஏழை, எளியோர்களுக்காக அம்மா உணவகங்கள் இன்று (25/04/2021) வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி அம்மா உணவங்களில் மக்களுக்கு உணவு கொடுக்கப்பட உள்ளது. போதுமான உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்துக் கொள்ளவும் அம்மா உணவகப் பணியாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல் கூறுகின்றன.
தூய்மைப் பணியாளர்களுக்கு இன்று சிறப்பு பேருந்துகள்!
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்காக இன்று (25/04/2021) 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு செல்வதற்கு ஏதுவாக குறிப்பிட்ட வழித்தடங்களில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உரிய அடையாள அட்டையுடன், முகக்கவசம் அணிந்து பயணிக்க தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி முகவர்கள் அடையாள அட்டையுடன் வரலாம்!
முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் வேட்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் தங்களுக்கு தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரி கொடுத்த அடையாள அட்டையுடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரலாம்.
இன்று மெட்ரோ ரயில்கள் இயங்குகின்றன!
இன்று (25/04/2021) காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இன்று மெட்ரோ ரயில்கள் 1 முதல் 2 மணி நேர இடைவெளியில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல்- கோயம்பேடு- விமான வழித்தடத்தில் இரண்டு மணி நேர இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல்- பரங்கிமலை வழித்தடத்தில் இரண்டு மணி நேர இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். விம்கோ நகர்- விமான நிலையம் வழித்தடத்தில் ஒரு மணி நேர இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 50% கட்டணம் தள்ளுபடி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாளில் அளிக்கப்பட்ட 50% கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டண தள்ளுபடி அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் 16 சிறப்பு ரயில் சேவைகள் ரத்து!
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்ற தமிழக அறிவிப்பால் 16 சிறப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் ஏழு மாதங்களுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை தளர்வற்ற முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.