பெரம்பலூர் எம்.பி. தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முசிறி பகுதியில் பிரமாண்ட பொதுகூட்டத்தில் பேசினார்.
இந்த கூட்டத்தை திருச்சி திமுக மா.செ. கே.என்.நேரு, கரூர் மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இந்த பிரமாண்ட பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
இந்த பிரமாண்ட பொதுகூட்டத்தில் பேசிய பாரிவேந்தர், ‘’இது வெற்றி மாநாடு போல் உள்ளது. ஒரே இடத்தில் வாக்குசேகரிக்க ஏற்பாடு செய்த கூட்டணி கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பெரம்பலூர் எனக்கு புதிய ஊர் அல்ல. எனது மூதாதையர் வழ்ந்த ஊர். நான் போகாத இடத்திற்கு போய் சேர்ந்தேன். அந்த இடத்தில் நான் எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை. ஒருவன் தாய், தந்தையை மறந்து விட்டு, ஏதோ ஒரு மாயை நம்பி சென்று விட்டேன். ஏன் கால தாமதமாக வந்தேன் என்றால் 2 ஆண்டுகள் நல்லது செய்வார்கள் என்று காத்திருந்தேன். இந்திய சுதந்திரத்தை எப்படி ஒரு நாள் இரவு பெற்றோமோ, அதே போல 2016 பணம் மதிப்பிழப்பு காரணமாக நம்மை எல்லாம் சுதந்திரத்தை இழக்க செய்து விட்டார்.
2017 ஆண்டு ஜி.எஸ்.டி. வரி விதித்து இளைஞர்கள் செய்த குறுசிறுவேலையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
2018 தமிழ்நாட்டிலே 4 மாவட்டங்களில் கஜா புயல் தாக்கிய போது உடனே திமுக தலைவர் ஸ்டாலின் ஓடோடி வந்து நிவாரணம் கொடுத்தார். நானும் என் தரப்பில் இருந்து அந்த பகுதியில் இருந்து என்னுடைய கல்வி நிறுவனங்களில் படிக்கும் சுமார் 650 மாணவர்களுக்கு 4 ஆண்டுகள் கல்வி கட்டணத்தை ரத்து செய்தேன். ரத்து செய்த கல்வி கட்டணத்தின் மதிப்பு 48 கோடி ஆகும்.
ஆனால் மத்திய அரசு இந்த கஜா புயலை குறித்து எந்த நிவாரணமும் நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த 3 காரணங்களே அந்த கூட்டணியில் இருந்து வெளியே வருவதற்கு காரணமாகின.
மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதை தள்ளிப்போட கூடாது. தள்ளிப்போட்டால் மக்களுக்கு தான் பாதிப்பு’’ என்றார்.