திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், பழனி, கொடைக்கானல், வத்தலக்குண்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா தனிப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட நலப்பணி இணை இயக்குநர் பூங்கோதையிடம் கேட்டபோது, "திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மூன்று பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் கொடைக்கானலைச் சேர்ந்த மருத்துவர். அவர் மலேசியா, ஸ்ரீலங்கா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வந்ததைத் தொடர்ந்து தனக்கு கரோனா வைரஸ் தாக்கியிருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
அவரிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். அந்த முடிவுகள் இன்று இரவுக்குள் கிடைக்கும். அது தவிர வத்தலக்குண்டுவைச் சேர்ந்த ஒருவரும் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதுதவிர பழனி அரசு மருத்துவமனையில் இரண்டு பேர் கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஐந்து பேருக்கும் மருத்துவர்கள் நேரடி கண்காணிப்பில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐந்து பேருக்கும் இதுவரை கரோனா அறிகுறி இல்லை.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகமாக கூட கூடிய பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதார துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது பொதுமக்கள் யாரும் வைரஸ் குறித்து பீதி அடைய வேண்டாம். வயது முதியவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். வெளியே சென்று வந்தால் உடனுக்குடன் கைகளை நன்கு கழுவ வேண்டும்" என்று கூறினார்.