சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்,
வீடு வீடாகச் சென்று காய்ச்சல் இருமல் பிரச்சனையுடன் யாரும் இருக்கிறார்களா என்று கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 41 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள், வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தொடர்பான தகவல்களை தொடர்ந்து பெற்று வருகிறோம். இதனால் தனிமைப்படுத்தப்படுவோர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த ஆய்வும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தனிமைப்படுத்துவதற்கான சிறப்பு வார்டுகளை நாங்கள் தமிழகம் முழுவதும் அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறோம். அரசு மருத்துவர்கள் மற்றும் வாலிண்டரியராக வரும் மருத்துவர்களுக்கும் நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம். கரோனா சிகிச்சைக்காக 17000 படுக்கைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிப்பில் உள்ளது. தற்பொழுது நாம் இரண்டாம் கட்டத்திற்கு சென்றுள்ளோம். 10 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த 10 மாவட்டங்களிலும் வீடு வீடாக சென்று இருமல், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி இருந்தால் சுய தனிமைப்படுத்துதல் கடைபிடிக்கவேண்டும். லேசாக அறிகுறி இருக்கும் பட்சத்தில் மாஸ்க் போன்ற மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்புகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.