கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது சமூக இடைவெளியைப் பின்பற்றி கோவிலில் வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிமுருகன் கோவிலில் தற்போது முருக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முன் அனுமதிச் சீட்டு பெற்று, முருகனை தரிசித்து வருகின்றனர். மேலும் படிப்பாதை நுழைவுப் பகுதியில் மருத்துவக் குழுவினர் காய்ச்சல், சளி உள்ளிட்டவை பரிசோதனை செய்து பக்தர்களை அனுமதித்து வருகின்றனர். இந்த நிலையில் வருகிற 7 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தொடங்க உள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் பழனிக்கு வர வாய்ப்பு உள்ளது. இதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் வசதிகள் செய்வது குறித்து அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து கோவில் ஊழியர்கள் சிலரிடம் கேட்டபோது, திங்கட்கிழமை முதல் வெளி மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படுவதால் அதிக பக்தர்கள் முருகனை தரிசிக்க வருவார்கள். தற்போது அடிவாரத்திலிருந்து மலைக் கோவிலுக்குச் செல்வதற்காக மின் இழுவை ரயில் அடைக்கப்பட்டதால், பக்தர்கள் படிப்பாதை வழியே சென்று வருகின்றனர். இந்த நிலையில் ஒரு நாளைக்கு சுமார் 1,500 பக்தர்கள் வீதம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் பக்தர்கள் நலன்கருதி பாதை வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அடிவாரத்திலிருந்து குடமுழக்கு அரங்கு வழியே படிப்பாதை செல்லவும், தரிசனம் முடிந்துத் திரும்பி வரும் பக்தர்கள் பாத விநாயகர் கோவில் வெளியே வருவதற்கும் பாதை மாற்றப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் மழையில் நனைவது தடுக்கப்படும். இதற்காக ஆங்கங்கே தடுப்புகள் வைக்கப்பட்டு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அதுபோல் விரைவில் அதிக அளவில் பக்தர்கள் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
பழனி கோவில் வளாகப் பகுதியில் செல்ஃபோன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பக்தர்கள் செல்ஃபோனை கோவிலுக்குக் கொண்டு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கோவில் வளாகத்தில் செல்ஃபோன் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் கோவிலுக்குள் உள்ள பகுதிகளில் செல்ஃபோனை வாங்கி அதைப் பாதுகாத்து தரிசனம் முடிந்து பெற்றுச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மின் இழுவை ரயில் நிலையம், படிப்பாதை விநாயகர் கோவில் ஆகிய இடங்களில் செல்ஃபோன் வைக்கும் சிறிய அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.