டெல்டா மாவட்டங்களில் ஒரே நாளில் 481 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
திருச்சி மத்திய மண்டலத்தில் கரோனோ தொற்று நாளுக்கு நாள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வேகமாக பரவி வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சியில் ஒரே நாளில் உச்சக்கட்டமாக 213 பேர் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்டா மாவட்டங்களான தஞ்சையில் 106, திருவாரூர் 44, புதுக்கோட்டை 59, பெரம்பலூர் 15, நாகை 14, கரூர் 4, அரியலூர் 26, என மொத்தம் 8 மாவட்டங்களில் 481 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரிப்பதைச் சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் தடுமாறி வருகிறார்கள். ஏற்கனவே மயிலாடுதுறையைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி, மன்னார்குடியைச் சேர்ந்த 64 வயது ஆண் ஒருவர், பெரம்பலூரில் 62 வயது மூதாட்டி, புதுக்கோட்டையில் 75 வயது உடைய ஆண், 57 வயது உடைய ஆண், திருச்சியில் 56 வயது உடைய கூலித் தொழிலாளி என 5 பேர் ஒரே நாளில் பலி ஆகி உள்ளனர்.
பலியானவர்களில் பெரும்பாலும் சிறுநீராக பிரச்சனை, நீரழிவு நோய், பாதிக்கப்பட்டு அதன் பிறகு கரோனோ தொற்று உறுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.