புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி கோமாபுரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வகுப்பறைகள் வராண்டாவில் மாடுகளை கட்டி வராண்டா முழுவதும் மாட்டுச் சாணம் நிறைந்து கிடப்பதையும் மாணவர்கள் அதை தாண்டி வகுப்பறைகளுக்கு செல்லும் அவல நிலையையும் துர்நாற்றத்துடன் வகுப்புகள் நடப்பது குறித்தும் நேற்று 16 ந் தேதி திங்கட்கிழமை நக்கீரன் இணையத்தில் 'பள்ளிக்கூடமா? மாட்டுக்கொட்டகையா? அரசுப் பள்ளி அவலம்!' என்ற தலைப்பில் சாணம் நிறைந்த பள்ளி வராண்டாவில் மாணவர்கள் தாண்டிச் செல்லும் படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தோம்.
பள்ளியின் அவலநிலை குறித்து நக்கீரன் செய்தி பற்றிய தகவலை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் அருணா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் ஆகியோர் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அனைவரும் கூறியிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர், வட்டாட்சியர், புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் தனித்தனியாகச் சென்று ஆய்வு செய்துள்ளனர். மேலும் பள்ளி வராண்டாவில் மாட்டுச் சாணம் கிடந்து அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்துள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடமும் விசாரணை செய்துள்ளனர்.
விசாரணையில் தொடர்ந்து இதுபோல மாடுகள் பள்ளி வளாகம், வராண்டாவில் இரவு நேரங்களில் அடைக்கப்படுவதும் விடுமுறை நாட்களில் பள்ளி நுழைவாயில் கேட் பூட்டி இருந்தாலும் பூட்டை உடைத்து மாடுகளை பள்ளி வளாகத்திற்குள் அனுப்பியுள்ளதும் தெரிய வந்தது. மேலும், தினசரி பள்ளி வராண்டாவில் கிடக்கும் மாட்டுச் சாணங்களை பள்ளி தூய்மைப் பணியாளரின் கணவர் உதவியுடன் சாணம் அகற்றப்பட்டு நுர்நாற்றத்தை மாற்ற பினாயில் தெளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர். பல முறை மாடுகளை பள்ளிக்குள் விடும் பொதுமக்களிடம் சொல்லியும் கேட்கவில்லை. உடைந்துள்ள சுற்றுச்சுவர் பக்கமாகவும், கேட் பூட்டுகளை உடைத்தும் மாடுகளை உள்ளே அனுப்புகின்றனர். அவர்களது மாட்டுச் சாணங்களைக் கூட மாட்டுக்காரர்கள் அகற்றுவதில்லை அதனால் தான் தூய்மைப் பணியாளர் கணவர் உதவியால் அகற்றப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
இவற்றையெல்லாம் விசாரணையில் கேட்டறிந்த அதிகாரிகள் பள்ளி வளாகத்தை சுற்றிப்பார்த்த போது பள்ளி மைதானத்தின் ஒரு பகுதியில் மாட்டுச் சாணங்கள் சேகரிக்கப்பட்ட குப்பைக் கிடங்கு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். சுமார் 2 டன் சாணம் குப்பைக் கிடங்கில் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ந்த அதிகாரிகள் பள்ளி வளாகத்தில் இது போன்ற குப்பைக் கிடங்குகள் இருக்க கூடாது உடனே குப்பைக் கிடங்கில் உள்ள சாணங்களை அகற்றுங்கள் என்று கூறியுள்ளனர்.
மேலும் அதிகாரிகளிடம், கிராமத்தினர் கூறும் போது ஊரில் தண்டோரா போட்டு இனிமேல் யாரும் பள்ளி வளாகத்தில் மாடுகளை கட்டக் கூடாது என்று சொல்வதாக கூறியுள்ளனர். கோமாபுரம் கிராம இளைஞர்கள் சிலர் நம்மிடம்.. இந்த பள்ளி வளாகம் மட்டுமின்றி அருகில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகத்திலும் மாடுகள் அடைக்கும் பட்டியாக மட்டும் பயன்படுத்தவில்லை. மது அருந்தும் இடமாகவும், சீட்டாட்ட களமாகவும் என பல சமூகவிரோதச் செயல்களின் கூடாரமாக செயல்படுத்துகிறார்கள். இதனை ஒரு பள்ளி வளாகமாக பயன்படுத்தவில்லை. இரவு நேரங்களில் பள்ளி கட்டிட மாடி, பள்ளி வளாகங்களில் ஆங்காங்கே செல்போன் லைட் வெளிச்சத்தில் இளைஞர்கள் கூட்டமாக அமர்ந்திருப்பார்கள் என்றனர் வேதனையுடன்.
நக்கீரன் செய்தி எதிரொலியாக மாவட்ட நிரவாகம் எடுத்துள்ள முதல்கட்ட நடவடிக்கைகளை பாராட்டும் கிராம மக்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்கள் நடக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். நடவடிக்கைக்கு உத்தரவிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு நன்றிகள் என்கின்றனர்.