திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா மகாதீபம் டிசம்பர் 10ந்தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றிய நாளில் இருந்து 11 நாள் மலை உச்சியில் தீபம் எரியவைப்பது கோயிலின் ஐதீகம். அதன்படி தீபம் டிசம்பர் 20ந் தேதி வரை மலை உச்சியில் எரிந்தது. 11 நாட்கள் முடிந்த நிலையில் 21ந்தேதி காலை, மலையில் உச்சியில் வைக்கப்பட்ட தீப கொப்பறை மலையில் இருந்து கீழே இறக்கப்பட்டு அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது.
தீபம் எரிந்த நாட்களில் உருவான கறுப்பு மை சேகரிப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. அந்த தீப மை அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு பூசி அபிஷேகம் செய்யப்படும். அதன்பின்னர் அந்த மை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் தீப மை கட்டளைதாரர்கள், உபயதாரர்களுக்கு, நெய் வழங்கியவர்களுக்கு தரப்படும் அதே நேரத்தில் விற்பனையும் செய்யப்படும் என்பது குறிப்பிடதக்கது.
தீபம் மை என்கிற பெயரில் சிலர் கறித்தூள்களை கொண்டு மை உருவாக்கி, இது அண்ணாமலையார் கோயில் தீப மை என வெளியூர் பக்தர்களுக்கு தந்து ஏமாற்றி பணம் பறிப்பதாக கூறப்படுகிறது. அதனால் பக்தர்கள் ஏமாறாமல் கோயில் வளாகத்தில் விற்பனை செய்யப்படும் மை பெறுவது சிறந்தது என்கிறார்கள் அண்ணாமலையார் கோயிலின் உள்ளுர் பக்தர்கள்.